﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<author>இரா.நாகசாமி</author>
<book>பொய்யிலி மாலை</book>

<title><line>தீக்கூர்ந்த திருமேனி</line></title>

<para>
<text>
அப்பர் பெருமான் தமது வலம்புரம் பதிகத்தில்
</text>
</para>

<para>
<verse>
<line>தீக்கூர்ந்த திருமேனி ஒருபால் மன்னி</line>
<line>ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர்</line>
</verse>
</para>

<para>
<text>
என்று பாடுகிறார். இந்த சொற்றொடர் இந்திய சமயத்துக்கே ஒரு ஆழ்ந்த கருத்தை அள்ளி வீசுகிறது. சிவபெருமானின் பல தோற்றங்களில் சிக்கலான ஒரு உருவம் எவ்வாறு தோன்றியது? அதன் தத்துவம் என்ன என்றறிய இவ்வரும் சொற்றொடர் உதவுகிறது. அதை ஆய்வதே இக்கட்டுரை.
</text>
</para>

<para>
<text>
சிவபெருமான் ஜோதி மயமானவர். அளப்பரும் ஜோதி. ஜோதிப்பிழம்பாய் இலிங்க உருவில் தோன்றிய ஞானச்சுடர்.
</text>
</para>

<para>
<text>
"திருவையாறு அகலாத செம்பொற்ஜோதீ" என்னும் நாவுக்கரசர் பரமனை ஜோதியுட் ஜோதி என்றும் தெள்ளரும் சிவச்சோதித் திரள் என்றும் பாடுகிறார். சிவபெருமானே ருத்திரன் என்பது நமது மரபு.
</text>
</para>

<para>
<verse>
<line>உம்பரானை ருத்திர மூர்த்தியை</line> 
<line>அம்பரானை அமலனை ஆதியை</line>
</verse>
</para>

<para>
<text>
என்கிறார் அப்பர். ருத்திரன் என்பதும் சிவன் என்பதும் எவ்வாறு ஒரே பரம்பொருளை கூறுகிறதோ அதே போலே ருத்திரன் என்றாலும் அக்னி என்றாலும் ஒன்றே தான். அதைத்தான் அப்பர் "தீக்கூர்ந்த் திருமேனி ஒருபால்" என்கிறார். இங்கு பரமனின் ஒரு பகுதி அக்னியாக காட்சியளிக்கிறது என்பது பொருள். 
</text>
</para>

<para>
<text>
இவருடைய மறு பகுதி அரி உருவமாக விஷ்ணுவாக விளங்குகிறது. ஆதலின் அப்பர் பெருமான் இப்பாடலில் ஹரிஹரனாக சங்கரநாராயணன் ஆகத் திகழும் உருவைக் கூறுகிறார். பல பதிகங்களில் சிவபெருமான் ஹரிஹரர் உருவில் தோன்றுவதை பாடுகிறார்.
</text>
</para>

<para>
<verse>
<line>மன்ணினை உண்ட மாயன் தன்னை ஓர் பாகங் கொண்டார்</line>
</verse>
</para>

<para>
<text>
என்கிறார் (திருக் கச்சி மேற்றளி பதிகம்). சிவபெருமான் அர்த்தநாரியாகத் திகழ்கிறார் என்பது நாம் அறிந்த உண்மை. ஹரிஹரன், அர்த்தநாரி இரண்டு உருவங்களும் தனிதன்மை வாய்ந்தவை. இரு உருவங்களும் ஓர் உடலாய் இணைந்து நிற்பதை சித்தரிக்கும் உருவங்கள். ஹரிஹரர் உருவைப் போலவே அர்த்தநாரி உருவமும் தேவாரப்பதிகங்களில் பாடபடுகின்றன.
</text>
</para>

<para>
<verse>
<line>அரிதரு கன்ணினாளை ஒரு பாகம் ஆக அருள் காரணத்தில் வருவர்</line>
</verse>
</para>

<para>
<text>
என்பது தேவி அருள் பாலிப்பவள். அவளை பாகமாகக் கொண்டவர் என்று பாடும் அப்பர் "சிவன் என்னும் ஓசை அல்ல" என்னும் திருப்பதிகம் முழுவதும் அர்த்தநாரி உருவைப் போற்றுகிறார்.
</text>
</para>

<para>
<text>
ஹரிஹரன் உருவில் வலப்புறம் சிவனாகவும் இடப்புறம் திருமாலாகவும் தோன்றுகிறார். அதே போல அர்த்தநாரி உருவில் வல்ப்புறம் சிவனாகவும் இடப்புறம் தேவியாகவும் காட்சி அளிக்கிறார். இரு உர்வங்களிலும் வலப்புறம் சிவன் தான். இடப்புறம் மட்டும் ஒன்றில் திருமாலாகவும் மற்றதில் தேவியாகவும் காட்சி அளிக்கிறார். இதில் இருந்து தேவியும் திருமாலும் ஒன்றே என்ற கருத்து எழுகிறதல்லவா? அதைத்தான் அப்பர் 
</text>
</para>

<para>
<verse>
<line>அரி அல்லால் தேவி இல்லை ஐய்யன் ஐய்யாரனார்க்கே</line>
</verse>
</para>

<para>
<text>
என்று பாடுகிறார். திருமால் பாகம் தேவி ஆகவும் திகழ்கிறார் என்பது பொருள்.
</text>
</para>

<para>
<verse>
<line>தீக்கூர்ந்த திருமேனி ஒருபால் மன்னி</line> 
<line>ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர்</line>
</verse>
</para>

<para>
<text>
என்கிறார் அல்லவா?
</text>
</para>

<para>
<text>
இவ்வமயம் யஜுர்வேததில் உள்ல ஒரு பகுதியை நினைவு கூர்தல் தகும். கும்பாபிஷேகம் முதலிய பல வழிபாடுகளில் அக்னியில் ஹோமம் செய்யும் போது "வஸோர்தாரா" என்னும் ஹோமம் செய்வார்கள். 
</text>
</para>

<para>
<text>
"வஸோர்தாரா" என்றால் என்ன? எந்த தெய்வத்தை நோக்கி இந்த ஹோமம் செய்யப்படுகிறது? என்று ஆய்வாளர் கேட்கின்றனர். [என்று வேதமே கூறுகிறது.] அதற்கு வேதமே பதில் கூறுவதாக ஒரு பகுதி உள்ளது. 
</text>
</para>

<para>
<text>
வேதம் கீழ்க்கண்டவாறு பதில் கூறுகிறது. இந்த "வஸோர்தாரா" என்பது "அக்னா விஷ்ணு" என்ற இரட்டைத் தெய்வத்தைக் குறித்துக் கொடுக்கப்படுகிறது. இங்கு அக்னியும், விஷ்ணுவும் ஓருருவராகத் திகழ்வதால் "அக்னா விஷ்ணு" என்று அழைக்கப்படுகின்றனர். அக்னி என்பவரும் விஷ்ணு என்பவரும் வசுதான். இருவருக்கும்தான் இந்த தாரை. அக்னா விஷ்ணுவைக் குறித்துத்தான் இந்த வழிபாடு, என்று கூறும். 
</text>
</para>

<para>
<text>
வேதம் மேலும் தொடருகிறது. ருத்ரன்தான் இந்த அக்னி என்பவர். அவருக்கு இவ்விரண்டு உருவங்கள் உள்ளன. கடுமையான தோற்றம் ஒன்று. அருள்மயமான தோற்றம் ஒன்று. எது கடுமையான உருவமோ [கோரமான] அதைக் குறித்து "சதருத்ரீயம் [ஸ்ரீருத்ரம்]" என்ற மந்திரத்தினால் போற்றினால் அது சாந்தமடைகிறது. எந்த உருவம் அருள் வடிவானதோ அதைக்குறித்து "வஸோர்தாரை" என்ற மந்திரத்தால் போற்றுகிறோம். அதனால் அது மகிழ்வடைகிறது. இதுதான் வஸோர்தாரையின் நிலையான தத்துவம் என்று வேதம் கூறுகிறது
</text>
</para>

<para>
<text>
இங்கு வேதத்தின் பொருள் மட்டுமல்ல. அந்த சொற்களைக் கூறும் ஒலியும் முக்கியமானவை. அதைக் கீழே காண்போம். ஏதோ வேதம்தானே? நமக்குப் புரியுமோ புரியாதோ என்று விட்டு விடாதீர்கள்! மிகவும்  எளிமையான பகுதி. எல்லோருக்கும் புரியும் வகையில்தான் உள்ளது. 
</text>
</para>

<para>
<verse>
<line>ருத்ரோ வா ஏஷ யத் அக்னி:</line>
</verse>
</para>

<para>
<text>
இந்த அக்னி என்பது ருத்ரன்தான். 
</text>
</para>

<para>
<verse>
<line>தஸ்ய ஏதே தனுவௌ</line>
</verse>
</para>

<para>
<text>
அவனுக்கு இவ்விரு உருவங்கள். 
</text>
</para>

<para>
<verse>
<line>கோரா அன்யா சிவா அன்யா</line>
</verse>
</para>

<para>
<text>
ஒன்று கோரமானது. கடுமையானது. பயங்கரமானது. [அக்னி அல்லவா] மற்றது அருள்மயமானது. சிவமயமானது. 
</text>
</para>

<para>
<verse>
<line>யத் சதருத்ரீயம் ஜுஹோதி யைவ அஸ்ய</line>
<line>கோரா தனூர் தாம் தேன சமயதி</line>
</verse>
</para>

<para>
<text>
எந்த கோரமான உருவை நோக்கி ருத்திரத்தால் போற்றுகிறோமோ அதனால் அவ்வுருவம் சாந்தமடைகிறது. 
</text>
</para>

<para>
<verse>
<line>யத் வசோர்தாராம் ஜுஹோதி யைவ அஸ்ய</line>
<line>சிவாதனூ தாம் தேன பிரீனாதி</line>
</verse>
</para>

<para>
<text>
எந்த உருவம் அருள் மயமானதோ அதைக்குறித்து வஸோர்தாரையால் போற்றுகிறோம். அதனால் அவ்வுருவம் மகிழ்ச்சியடைகிறது என்று வேதம் கூறுகிறது.
</text>
</para>

<para>
<text>
இதிலிருந்து நமக்கு பல அரும் செய்திகள் கிடைக்கின்றன. வேதகாலத்தில் அக்னியும் விஷ்ணுவும் இரண்டு உருவங்களாக, ஒன்றாய் இணைந்த தெய்வமாக வணங்கப்பட்டன. அந்த உருவத்துக்கு "அக்னாவிஷ்ணு"  என்று பெயர். இதில் அக்னி என்பது ருத்ரன்தான். அவனைக் குறித்து ருத்ரம் என்ற வேதமந்திரத்தால் போற்றப்பட்டது. அக்னியின் உருவம் சம்ஹாரம் செய்யும் கோரமான உருவம். அது வலப்பகுதி. அதை "கோரா தனு" [தனு என்றால் உடல் என்று பொருள்.] என்றனர். மற்றது விஷ்ணுவின் உருவம். அப்பகுதியை சிவா தனூ:[சிவமயமான உடல் = அருள்மயமான உடல்] என்றனர். அதைக்குறித்து "வசோர்தாரா" என்ற மந்திரத்தால் வணங்கப்பட்டது என்று அறிகிறோம்.
</text>
</para>

<para>
<text>
ஸ்ரீருத்ரம் என்னும் வேத மந்திரத்தை அறியாத சைவர் இருக்கமுடியாது. அதில்தான் சிவன் என்ற சொல் வருகிறது. "நமச்சிவாய ச சிவதராய ச" என்று வருகிறது. ருத்ரம் சொல்லித்தான் சிவபெருமானுக்கு இன்றும் அபிஷேகம் செய்கிறோம். ருத்ரபசுபதி நாயனார் என்று சிவமுக்தியடைந்த நாயனார் ருத்ரம் சொல்லித்தான் முக்தியடைந்தார் என்பதும் நாமறிவோம். சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமானது ருத்ரம். இதைத்தான் சதருத்ரீயம் என்று கூறுகிறோம். 
</text>
</para>

<para>
<text>
வேதமும் இதைத்தான்  கூறுகிறது. அக்னாவிஷ்ணு என்ற உருவந்தான் ஹரிஹரன் என்று அழைக்கப்படுகிறது. என்று புலனாகின்றது. இப்பொழுது முதலில் குறித்த அப்பர் பெருமானின் பாடலை ப் பாருங்கள். சிவபெருமானை "பரமனே, நீ ஒரு பாதி அக்னியாகவும், மறுபாதி விஷ்ணுவின் உருவமாகவும் விளங்குகிறாய்" என்கிறார்.
</text>
</para>

<para>
<verse>
<line>தீக்கூரும் திருமேனி ஒருபால் மன்னி</line>
<line>மறுபால் அரியுருவம் திகழ்ந்த செல்வர்</line>
</verse>
</para>

<para>
<text>
என்பதன் பொருள் இப்பொழுது தெளிவாகிறது. வேதத்தில் எந்த உருவை "அக்னா விஷ்ணு" என்று போற்றினார்களோ அந்த அரியரன் உருவத்தைத்தான் அப்பரின் பாடல் குறிக்கிறது என்பதில் ஐயமிருக்க முடியாது. 
</text>
</para>

<para>
<text>
அப்பர் பெருமான் அனேகமாக எல்லாப் பதிகங்களிலும் சிவபெருமானை வேதத்தின் உருவானவர் என்று பாடுவது நாம் அறிந்ததே. "விஷ்ணு" என்ற பகுதியை வேதம் "சிவா" என்று கூறுவதைக் காணுங்கள். சிவா என்றால் சிவபெருமானின் தேவி, உமை என்றும் பொருள். இங்கு சிவா என்ற சொல்லால் இரண்டு பொருள்கள் விளங்குகின்றன. ஒன்று அருள் மயமானது; மற்றது உமை என்பது. ஆதலின் இவ்வடிவம் அர்த்தநாரி உருவையும் குறிக்கும். ஆதலின் "அரியலால் தேவியில்லை" என்ற சொல்லுக்கும் முழுத்தெளிவு பெறுகிறோம். ஆதலின் இன்று அர்த்தநாரி என்றும், அரியரன் என்றும் எதைப் போற்றுகிறோமோ அதையே வேதகாலத்தில் "அக்னா விஷ்ணு" என்னும் இரட்டைத் தெய்வமாக வணங்கினர். அதுவே 
</text>
</para>

<para>
<text>
"தீக்கூர்ந்த திருமேனி ஒருபால் மன்னி மறுபால் அரியுருவம் திகழ்ந்த செல்வர்" என்னும் அப்பர் பெருமானின் வாக்கு. 
</text>
</para>

</article>
